அந்த டீசருக்கும் எனக்கும் சம்மந்தமில்லை...! விஜய் சேதுபதி பட இயக்குநர் அதிர்ச்சி!
அந்த டீசருக்கும் எனக்கும் சம்மந்தமில்லை...! விஜய் சேதுபதி பட இயக்குநர் அதிர்ச்சி!

எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தை இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் ஆகிய முண்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது இந்தப் படத்தின் டீசர் மார்ச் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்று விஜய் சேதுபதி பட இயக்குநர் விடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு ஒன்றை படத்தின் இயக்குநர் கிருஷ்ண ரோகாந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், மன்னிக்கவும்... இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் பற்றிய அத்தனை அப்டேட்டையும் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.
வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் காட்சிகள் அப்படியே இருக்கிறது. தயாரிப்பு தரப்பில் இந்த டீசர் வெளியிடப்பட்டதற்கான காரணங்களையும், குளறுபடியை சரிசெய்யும் படியும், இதற்கான அடிப்படைக் காரணம் பற்றியும் விளக்கம் கேட்டிருக்கிறேன். பதில் வந்ததும் ரசிகர்களாகிய உங்களுடன் அதை பகிர்ந்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

