Theme Check

குற்றம் சாட்டப்பட்டவரே விசாரணை அதிகாரி.. அதிரவைத்த ஆதிதிராவிடர் நலத்துறை..!

குற்றம் சாட்டப்பட்டவரே விசாரணை அதிகாரி.. அதிரவைத்த ஆதிதிராவிடர் நலத்துறை..!

குற்றம் சாட்டப்பட்டவரே விசாரணை அதிகாரி.. அதிரவைத்த ஆதிதிராவிடர் நலத்துறை..!
X

ஆதிதிராவிடர் நலத்துறை லஞ்ச வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி செயற்பொறியாளரே அந்த புகாரின் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது, அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூரைச் சேர்ந்தவர் சரவணகுமார் (55). திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரான இவர், தன் காரில் பிராட்டியூரைச் சேர்ந்த டிரைவர் மணி (57) என்பவருடன் கடந்த மார்ச் 30-ம் தேதி, திருச்சியில் இருந்து சென்னைக்கு 38.75 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் எடுத்துச் சென்றார்.

விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான போலீசார், சரவணகுமாரை பிடித்து, பணத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 12 சமையலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதற்காக பெற்ற லஞ்சப் பணத்தை சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரக உதவி செயற்பொறியாளர் கலைமோகனிடம் கொடுக்க எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கலைமோகன், சரவணகுமார், மணி மற்றும் திருச்சி அம்பேத்கர் கல்லுாரி மாணவர் விடுதி காப்பாளர் செந்தில் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன் விசாரணை அதிகாரியாக, வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள உதவி செயற்பொறியாளர் கலைமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 12 பேரிடம் நேற்று விசாரணையை துவக்கியுள்ளார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே, அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Next Story
Share it