இந்தியாவிடம் ஒப்படைத்தது சீன ராணுவம்..!
இந்தியாவிடம் ஒப்படைத்தது சீன ராணுவம்..!

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் காணாமல் போன மிரம் தரோன் (17) என்ற சிறுவனை, இந்திய ராணுவத்திடம் சீனா ஒப்படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவன் சமீபத்தில் இந்திய - சீன எல்லையில் காணாமல் போனார். இந்த சிறுவனை, சீன ராணுவம் கடத்திச் சென்றதாக எம்பி தபீர் கவோ தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: ‘சீன ராணுவத்தினரை 'ஹாட்லைன்' வாயிலாக தொடர்பு கொண்டு விவரத்தை கூறினோம். மூலிகை சேகரிக்கவும், வேட்டையாடவும் வந்த சிறுவன் வழி தவறி காணாமல் போனதாக தெரிவித்தோம்.
சிறுவனை தேடி கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி தெரிவித்து உள்ளோம்’ என தெரிவித்தனர். இதையடுத்து, மிரம் தரோன் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என சீன ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கிரண் ரிஜ்ஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சீன ராணுவம், காணாமல் போன மிரம் தரோன் என்ற சிறுவனை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு சிறுவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.