கவர்னரை சந்தித்தார் முதல்வர்.. இவைகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்..!
கவர்னரை சந்தித்தார் முதல்வர்.. இவைகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்..!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் கவர்னருடைய உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என் ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து கவர்னருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்காக கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்தும் முதல்வர் கவர்னருடன் கலந்தாலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

