இறந்தவர் உயிருடன் வந்தார்.. ஈரோடு அருகே பரபரப்பு..!
இறந்தவர் உயிருடன் வந்தார்.. ஈரோடு அருகே பரபரப்பு..!

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே புஞ்சைதுறையம் பாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (55). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்ட சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்திக் மற்றும் பிரபு குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் மூர்த்தியை தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 31-ம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக கார்த்திக்குக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்தபோது, முகம் அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் இருந்தது. அந்த நபருடைய உருவம் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தைதான் என கார்த்திக் முடிவு செய்தார்.
உடனே உடலை எடுத்துக்கொண்டு புஞ்சை துறையம்பாளையம் கொண்டு சென்று அந்த உடலை முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார். இந்நிலையில் மூர்த்தி திடீரென நேற்று இரவு வீடு திரும்பினார்.
அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனால் புஞ்சை துறையம்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால் அடக்கம் செய்யப்பட்ட அந்த நபரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

