மனைவியை யார் துன்புறுத்தினாலும் கணவன் தான் முழு பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மனைவியை யார் துன்புறுத்தினாலும் கணவன் தான் முழு பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கணவன் வீட்டில் இருக்கும் பொழுதோ, இல்லாத பொழுதோ அவனது மனைவியை கணவரின் உறவினர்கள் யார் துன்புறுத்தினாலும், காயம் ஏற்படுத்தினாலும் அதற்கு அந்த கணவனே முழு பொறுப்பாவார் என்று, ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தவரின் ஜாமீன் மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லூதியானாவில் கணவன் மனைவி வசித்து வருகின்றனர். அந்த கணவனுக்கு இது மூன்றாவது திருமணம். மனைவி ஏற்கெனவே மணமாகி விவாகரத்தானவர். இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணமான நிலையில், 2018ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம், தன்னை கணவரும், மாமியாரும், மாமனாரும் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணைத் தொகைப் போதவில்லை என்று சித்ரவதை செய்து வருவதாகவும் அந்த பெண்மணி லூதியானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அவரது புகார் மனுவில், தன்னுடைய மாமியார் தன்னை கொடூரமாக தாக்கியுள்ளதாகவும் ஆதாரங்களுடன் புகாரளித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த நபரின் வழக்கறிஞர் குஷாக்ரா மகாஜன், தன்னுடைய கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த போது, இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச், நீங்கள் எந்த வகையான மனிதர்? என்று கோபமாக கேட்டார். தன்னுடைய கணவர், தன்னை கழுத்தை நெரிக்கப் போவதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

தன்னை சித்ரவதை செய்து கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் கணவர் எப்படிப்பட்டவர்? என்று கேள்வி எழுப்பினார். வீட்டில், கணவன் இல்லாத போது மாமியாரால் மனைவிக்கு ஏற்பட்ட காயத்திற்கும் கணவர் தான் காரணம் என்று கூறினார். மற்றொரு உறவினரால் காயம் ஏற்பட்டாலும், அதற்கும் கணவர் பொறுப்பேற்கப்படுவார் என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் கூறி ஜாமீன் மனுவையும், மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்துள்ளது.

