பணியில் சேர்ந்த முதல் நாளே கை நீட்டிய அதிகாரி.. காப்பு மாட்டிய போலீசார்..!
பணியில் சேர்ந்த முதல் நாளே கை நீட்டிய அதிகாரி.. காப்பு மாட்டிய போலீசார்..!

கர்நாடகா மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ப்ரீத்தி ராத்தோடு. இவர், உத்தர கன்னடா மாவட்டம் குமட்டாவில் கலால்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து அதே மாவட்டம் அங்கோலாவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் அங்கோலாவில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்தியவர்களை பிடித்ததுடன், அவர்களிடம் இருந்து மதுபானங்களை அதிகாரி ப்ரீத்தி பறிமுதல் செய்திருந்தார்.
அத்துடன், மதுபானம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வேறு ஒருவருக்கு சேர்ந்ததாகும், அந்த நபர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக ப்ரீத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அத்துடன், அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முதலில் ரூ.50 ஆயிரமும், அதன் பிறகு ரூ.20 ஆயிரமும் கொடுக்கும்படி அதிகாரி ப்ரீத்தி கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் கூறியபடி அதிகாரி ப்ரீத்தியை சந்தித்து ரூ.20 ஆயிரத்தை அந்த நபர் கொடுத்தார். அப்போது அவரை, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பணி இடமாறுதல் செய்யப்பட்டு, வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அதிகாரி ப்ரீத்தி ராத்தோடு லஞ்சம் வாங்கி போலீசாரிடம் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

