இந்தியாவின் சிறந்த பாரம்பரியங்களை நாட்டு மக்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை
இந்தியாவின் சிறந்த பாரம்பரியங்களை நாட்டு மக்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்களை பவினா பட்டேல் வெள்ளி வென்று சாதனை படைத்து உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பிரதமர் மோடி வானொலி மூலம் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை காலையில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களிடம் பேசுவது வழக்கம்.
இதில் பேசிய பிரதமர், விளையாட்டின் மீதுள்ள இந்த உத்வேகம் நின்று விட நாம் விட்டு விடகூடாது. நம்முடைய கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் விளையாட்டு மைதானங்கள் நிரம்ப வேண்டும். அனைவரும் பங்கேற்பதன் மூலம் மட்டுமே, விளையாட்டில் அடைய வேண்டிய தகுதியான உயரத்தினை இந்தியா அடையும் என கூறியுள்ளார்.
இந்த ஆண்டில், 40 ஆண்டுகளுக்கு பின்பு ஆக்கி போட்டியில் நாம் ஒலிம்பிக் பதக்கம் வென்று உள்ளோம். மேஜர் தியான் சந்த் இன்று உயிருடன் இருப்பார் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.
இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டின் மீது உள்ள ஈர்ப்பு பற்றி நாம் காண முடிகிறது. விளையாட்டின் மீதுள்ள இந்த ஆர்வமே மேஜர் தியான் சந்துக்கு செலுத்தும் மிக சிறந்த அஞ்சலி என கூறியுள்ளார்.
கிருஷ்ண ஜெயந்திக்கு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர் தொடர்ந்து பேசும்போது, கடவுள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
சிறு வயது கண்ணன் முதல் விஸ்வரூப உருவம் கொண்ட கிருஷ்ணன் வரையும் நாம் அறிந்திருக்கிறோம். கலைகளில் சிறந்ததுடன், ஆயுத பயிற்சியிலும் சிறந்த ஒருவராக, அழகு, ஈர்ப்பு என அனைத்திலும் கிருஷ்ணன் இருக்கிறார்.
இந்த மாதத்தின் 20ந்தேதி கடவுள் சோம்நாத் கோவில் கட்டுமானத்துடன் தொடர்புடைய பணியானது மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த கோவிலில் இருந்து 3-4 கி.மீ. தொலைவில் பால்க தீர்த்தம் உள்ளது. இந்த பகுதியில் தனது கடைசி காலங்களை கடவுள் கிருஷ்ணன் செலவிட்டு உள்ளார்.
அமெரிக்க பெண் ஒருவர் ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் தொடர்புடையவராக இருப்பதுடன் கடந்த சில நாட்களுக்கு முன் தன்னை தொடர்பு கொண்டு பேசினார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
உலக மக்கள், இந்திய ஆன்மீக விசயங்கள் மற்றும் தத்துவங்களுக்கு செவி கொடுத்து வரும் சூழலில் நண்பர்களே, இதுபோன்ற இந்தியாவின் சிறந்த பாரம்பரியங்களை நாட்டு மக்களாகிய நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

