கள்ள நோட்டு அச்சிட்ட நபர் கைது!!
கள்ள நோட்டு அச்சிட்ட நபர் கைது!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கம்பம் பகுதியில் பல இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
கம்பம் நெல்லுக்குத்தி புளிய மரப்பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையில் போலீசார் ரோந்து பணிமேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டப பகுதி அருகே சந்தேகப்படும்படியாக நடந்து வந்த நபரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அவரை பரிசோதனை செய்ததில் அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுக்கள் ஒரே வரிசை எண் கொண்ட ஜந்து 100 ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரே வரிசையில் கொண்ட ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததால் அவர் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடும் நபராக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணையில் கம்பம் அருகே உள்ள சாமான்டிபுரம் கிராமப் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மகன் 35 வயதாகும் குணசேகரன் என்பது தெரிய வந்தது. அவர் கடந்த நான்கு மாதங்களாக தனது மனைவிக்கு கூட தெரியாமல் வீட்டில் வைத்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

அவரிடமிருந்த 87 ஆயிரத்து 810 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும் இரண்டு ஜெராக்ஸ் கலர் பிரிண்ட் மிஷின்களையும், ரூபாய் நோட்டுக்களை வெட்டுவதற்கு உதவிய இரண்டு கட்டிங்மிஷின்களையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் 6,800 கட்டிங் செய்யப்படாத நோட்டுக்களையும் கைப்பற்றி கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

