ரூ.45 லட்சம் திருடிய நபர் ஒரு டூத் பிரஷால் சிக்கினார்!!
ரூ.45 லட்சம் திருடிய நபர் ஒரு டூத் பிரஷால் சிக்கினார்!!

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் தனது கடையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ராஜேஷ் என்பவர் பணிபுரிந்து வந்ததாகவும் தங்களுக்கு தெரியாமல் போலி பில் மூலம் ரூ.45 லட்சம் வரை சிறுக சிறுக மோசடி செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பொருள்களில் டூத் பிரஷ் ஒன்றை மாற்றுவதற்காக பல்பொருள் அங்காடிக்கு நேரில் வந்துள்ளார். அப்போது பில்லை வாங்கி சோதனை செய்தபோது வாடிக்கையாளருக்கு கொடுத்த பில்லில் ரூபாய் 5,000 எனவும் பல்பொருள் அங்காடியில் உள்ள கணினியில் ரூபாய் 2,500 எனவும் குறிப்பிட்டு இருந்ததை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக விசாரணை செய்தபோது ராஜேஷ் என்பவர் இரண்டு பில்களை உருவாக்கி, தவறாக கணக்கு காட்டி மோசடி செய்து வந்த விஷயம் சுரேஷுக்கு தெரியவந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்டபோது ரூ.5 லட்சம் பணத்தை மட்டுமே மோசடி செய்ததாக கூறியுள்ளார்.
ராஜேஷ் வேலை செய்த ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கை பார்த்தபோது சிறுகச்சிறுக ரூ.45 லட்ச ரூபாய் பணத்தை ராஜேஷ் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தான் மோசடி செய்த மொத்த பணத்தையும் தருவதாக ராஜேஷ் பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.
பின் வீட்டுக்கு சென்ற ராஜேஷ் அதன்பிறகு தலைமறைவானார். இதன் பின்னரே சுரேஷ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் கோயமுத்தூரில் தலைமறைவாக இருந்த ராஜேஷை நுங்கம்பாக்கம் போலீசார் தற்போது கைது செய்தனர்.

கொள்ளையடித்த பணத்தை வைத்து சொந்த ஊரில் வீடு மற்றும் கார் என சொகுசாக வாழ்ந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மறைத்து ஏழைப் போல் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் தொடர்ந்து நடித்து பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
newstm.in

