ராட்சத அலையில் இருந்து இளைஞர்களை காப்பாற்றிய காவலர்..! பாராட்டி கௌரவித்த கூடுதல் டிஜிபி!!
ராட்சத அலையில் இருந்து இளைஞர்களை காப்பாற்றிய காவலர்..! பாராட்டி கௌரவித்த கூடுதல் டிஜிபி!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான விஷ்ணு (வயது 22), சபரிஷ் (24) ஆகியோர் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணியில் இருந்த கடலோர காவல் படைகாவலர் சௌந்தரராஜன் சீருடையுடன் கடலில் குதித்து மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்தார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து காவலர் சௌந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்தநிலையில் போலீஸ் ஏடிஜிபி ஆனந்த்மோகன் காவலர் சௌந்தரராஜனை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உடனிருந்தார்.

அதைத்தொடர்ந்து ஏடிஜிபி ஆனந்த்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது,
“புதுவைக்கு வந்து கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காவலர் சௌந்தரராஜன் காப்பாற்றியுள்ளார். இதுபோல்தான் போலீசார் பணியாற்ற வேண்டும். புதுவை காவல்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது உடல் தகுதி தேர்வுகள் முடிந்து உள்ளன. அடுத்ததாக எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அதன்பின் ஊர்க்காவல் படைவீரர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவையில் ஒரு சில சம்பவங்களில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. வெடிகுண்டு நடமாட்டம் தடுக்கப்படும். அதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு தயாரிக்கும் நபர்களை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

