ஓபிஎஸ் பொருளாளர் பதவிக்கும் ஆப்பு.. ஈபிஎஸ் தரப்பில் கடும் போட்டி !!
ஓபிஎஸ் பொருளாளர் பதவிக்கும் ஆப்பு.. ஈபிஎஸ் தரப்பில் கடும் போட்டி !!

ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியான பிறகும் சரி அதிமுகவில் கோஷ்டி மோதல் மட்டும் நிற்கவில்லை. தற்போது அதிமுகவுக்கு யார் தலைமை என்ற மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுவிட்டனர். இதற்கு ஐபிஎல் ஏலம் போல பலகோடி பேரம்பேசப்பட்டதாக கூறப்படுவது ஒருபுறம்.
இதற்கிடையில், பெரியளவில் நிர்வாகிகள் ஆதரவு இல்லாததால் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஆனால் அப்பதவி இப்போது செல்லாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வருகிறது. இந்த பஞ்சாயத்து ஒருபுறம் இருக்க, ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளர் பதவியை வகித்து வருகிறார். கட்சியில் முக்கிய பதவிகளில் இதுவும் ஒன்று.

இந்தநிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் இருக்கும் பொருளாளர் பதவியையும் பறிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். வரும் 11ஆம் தேதி பொதுக்குழுவில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அதேநேரத்தில், ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில் புதிய பொருளாளர் யார்? என்கிற கேள்வி அதிமுகவில் புதிய புகைச்சலை உருவாக்கியுள்ளது. பொருளாளர் பதவியை பிடிக்க அதிமுக மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரது பெயர்கள அடிபடுகிறது.
மேலும் சில முன்னணி நிர்வாகிகளும் பொருளாளர் பதவியை குறிவைத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு பொருளாளர் பதவியை அளிக்கலாம் என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

பொதுச்செயலாளர் பதவியை எளிதாக பிடித்துவிட்டாலும், பொருளாளர் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கலையும் சவாலயும் ஏற்படுத்தி உள்ளது. அவர் பொதுச்செயலாளர் பதவியை பெரும்பட்சத்தில் மீண்டும் கொங்கு மண்டலம் அல்லது அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கே அப்பதவி கொடுக்கப்பட்டால் மற்ற மண்டல நிர்வாகிகள் அதிருப்தி அடைவர். இதனால் தற்போதே அதற்கான தீவிர ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in

