சாலை சரியில்லை.. 50-க்கும் அதிகமானோர் திருமணத்திற்கு காத்திருப்பு..!
சாலை சரியில்லை.. 50-க்கும் அதிகமானோர் திருமணத்திற்கு காத்திருப்பு..!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது பெரனகோடு கிராமம். சிக்கமகளூரு தாலுகாவை சேர்ந்தது என்றாலும், அங்குள்ள மக்கள் மூடிகரே சட்டமன்றத் தொகுதியில் ஓட்டு போடுகின்றனர்.
இந்தக் கிராமத்தில் சரியான சாலையே இல்லை. இங்குள்ள 30 வயது இளைஞர்களை கேட்டால், ‘எங்கள் ஊரில் சாலை அமைத்ததை நாங்கள் பார்த்ததே இல்லை’ என்கின்றனர். முதியவர்களை கேட்டால், ‘நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சாலை அமைக்கப்பட்டதாக நினைவு' என்கின்றனர்.
‘குண்டும் குழியுமாக, கற்கள் நிரம்பிய சாலையே கிராமத்தினர் செல்லும் பாதையாகும். சாலைக்கு நடுவில் பாறைகள் உள்ளன. அரை அடி பள்ளம் உள்ளது. சாலை அமைத்து தாருங்கள் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
மழைக் காலங்களில் இங்குள்ள சாலைகளில் நடந்து செல்வது பெரிய சாகசம். இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் விழுந்து காயமடையாத நாட்களே இல்லை.
கிராமத்தில் சாலை இல்லை என்பதால் ஆசிரியர்களும் இங்கு வர தயங்குகின்றனர். இவர்களும் கூட பைக்கில் பள்ளிக்கு வரும் போது, விழுந்து காயமடைந்து நீண்ட விடுப்பு எடுத்த உதாரணங்கள் உள்ளன.
மொத்தம் 200 வீடுகள் உள்ள கிராமத்தில், 50க்கும் அதிகமான திருமண வயதை தாண்டிய ஆண், பெண்கள் உள்ளனர். பெண் பார்க்க வருகின்றனர்; சாலையை பார்த்து பெண் வேண்டாம் என மறுக்கின்றனர். இளைஞர்களுக்கு பெண் கொடுக்கவும் முன் வருவதில்லை’ என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

