அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. முடிவை முதலமைச்சர் மாற்றுவாரா என எதிர்பார்ப்பு?
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. முடிவை முதலமைச்சர் மாற்றுவாரா என எதிர்பார்ப்பு?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பாக தமிழக அரசின் முடிவுக்காக அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்த நிலையில் ஓய்வுபெறும் போது அவர்களுக்கான பண பலன்களை கொடுக்க முடியாமல் ஓய்வுபெறும் வயதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 59ஆக உயர்த்தியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 60ஆக அதிகரித்து அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான அரசாணையை திமுக அரசு வெளியிட்டது.
இந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை நீட்டித்துக் கொண்டே சென்றால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையொட்டி புதிய வகையிலான அறிவிப்புக்கு தமிழக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 33ஆண்டுகாலம் பணிபுரிந்தவர்கள் 58 வயதில் ஓய்வு பெறுவார்கள் என்றும், மற்றவர்கள் 60 வயது வரை பணிபுரிவார்கள் என்றும் தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 58 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வு நேரப் பணப்பலனை பாண்ட் பத்திரமாக கொடுக்கலாம் என்ற திட்டமும் அரசிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், ஓய்வுப்பெறும் போது பாண்ட் பத்திரம் வழங்கினால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணத்தைக் கொண்டு குழந்தைகளின் திருமணம், தொழில், தங்களது எதிர்காலத் தேவைகளுக்கு திட்டங்களை வைத்திருப்பதால் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
இந்த நிலையில், டிசம்பர் 18, 19 ஆகிய இரு நாள்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14ஆவது மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது. 19ஆம் தேதி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். அப்போது இது தொடர்பாக அரசு ஊழியர்கள் முதலமைச்சரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
newstm.in

