கடனை அடைக்க பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மகன்!!
கடனை அடைக்க பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மகன்!!

கடனை அடைக்க பணம் வேண்டும் என்பதற்காக தான் கடத்தப்பட்டதாக பெற்றோரிடமே நாடகமாடிய இளைஞரை போலீஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பென்சிலய்யா (54) என்பவர், அவரது மகன் கிருஷ்ணாபிரசாத்தை சிலர் கடத்தி வைத்துக் கொண்டு 30 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வடபழனி காவல் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது கிருஷ்ணாபிரசாத்தின் செல்போன் ஆன்-ல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிக்னலை ஆய்வு செய்த போலீசார், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் கிருஷ்ண பிரசாத் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து செகந்திராபாத் சென்ற போலீசார் சாலையில் நடந்து சென்ற கிருஷ்ணபிரசாத்தை பத்திரமாக மீட்டு சென்னை வடபழனி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிருஷ்ணபிரசாத்தை யாரும் கடத்தவில்லை என்றும், தன்னை கடத்தியதாக நாடகமாடி வீட்டிலிருந்து பணம் பறிக்க திட்டமிட்டு அதன்படி கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
கிருஷ்ண பிரசாத் குறும்படம் எடுப்பதாக கூறி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், பின் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் மீண்டும் குறும்படம் எடுப்பதற்கு தேவையான பணம் கிடைக்காததால் கடத்தல் நாடகம் அரங்கேற்றி வீட்டில் இருந்தே தனக்கு தேவையான பணத்தை பறிக்க திட்டமிட்டு கடத்தல் நாடகத்தில் ஈடுப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் காவல் நிலையம் வந்தனர். இளைஞரின் எதிர்காலம் குறித்து நல்லெண்ண அடிப்படையில் போலீசார் கிருஷ்ணபிரசாத்தை எழுதிவாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
newstm.in

