தகிக்கும் வெயில்.. ஆனால், மழைக்கு வாய்ப்பு என கூறும் வானிலை ஆய்வு மையம் !!
தகிக்கும் வெயில்.. ஆனால், மழைக்கு வாய்ப்பு என கூறும் வானிலை ஆய்வு மையம் !!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. இந்த நிலையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியிருப்பதாவது, தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மேட்டுப்பாளையம், குன்னூர், தாளவாடியில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது, என அவர் கூறியுள்ளார்.
newstm.in

