காதலனை ஏவிவிட்டு கணவனை கொலை செய்த மனைவி... போலீஸிடம் சிக்கியது எப்படி ?
காதலனை ஏவிவிட்டு கணவனை கொலை செய்த மனைவி... போலீஸிடம் சிக்கியது எப்படி ?

தெலுங்கானா மாநிலம் நிஜாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா. பட்டதாரி பெணான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே சிவா என்பவரை சியாமாளா காதலித்து வந்த நிலையில், காதல் குறித்து வீட்டில் எதுவும் சொல்லாமல், இஷ்டம் இல்லாமலே சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால், காதலனை மறக்கமுடியாமல் சந்திரசேகர் உடனான குடும்ப வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் இருந்த சியாமளா, கணவனை கொலை செய்து விட்டால், காதலனுடன் சேர்ந்து வாழலாம் என விபரீதமாக யோசித்துள்ளார்.
அதன்படி உணவில் எலிமருந்தை கலந்து கணவனுக்கு கொடுத்திருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட சந்திரசேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தனது சதித்திட்டத்தை மறைத்து, உணவு தான் பாயிசனாகிவிட்டதாக கூறி சமாளித்திருக்கிறாள்.
முதல் முயற்சி தோல்வி ஆகிவிட்டதால், 2வது முறையாக கணவனை கொல்ல முடிவு செய்தார். அதற்காக காதலனின் உதவியை நாடிய சியாமளா, சம்பவத்தன்று சித்துபேட்டையிலுள்ள கோவிலுக்கு நேர்த்திக்கடன் இருப்பதாக கூறி கணவன் சந்திரசேகரை அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி காதலன் சிவாவும், அவனது நண்பர்களும் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த சந்திரசேகரனை வழிமறித்த சிவா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை அடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், போலீசில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக சந்திரசேகரனின் பெற்றோருக்கு போன் செய்த சியாமளா, கணவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, நடுரோட்டில் விழுந்து கிடப்பதாகவும், ரெம்ப பயமாக இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்த சியாமளா, கணவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டார். மருத்துவர்கள் விசாரித்த போதும் அதே மாதிரி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
ஆனாலும், சியாமளாவின் பேச்சில் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் குடும்பத்தினர் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகாரளித்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சந்திரசேகர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்த நிலையில், போலீசார் மனைவி சியாமளாவிடம் விசாரித்த போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சியாமளா மற்றும் காதலன் சிவாவை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த சிவாவின் நண்பர்களையும் கைது செய்தனர்.

