செல்போன்ல இறந்த அம்மாவின் வீடியோ இருக்கு! தயவு செய்து கொடுத்துடுங்க! மகளின் கண்ணீர் கடிதம் !!
செல்போன்ல இறந்த அம்மாவின் வீடியோ இருக்கு! தயவு செய்து கொடுத்துடுங்க! மகளின் கண்ணீர் கடிதம் !!

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா மாநிலமும் உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலம் குடகு அருகில் உள்ள குஷால்நகரில் நவீன்குமார் (40)- பிரபா (36) தம்பதியர் 12 வயது மகளுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் தம்பதியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மடிகேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரபா கடந்த 16ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த சமயத்தில் அவரது செல்போன், ரூ.3 ஆயிரம் திருடுபோனது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, நவீன்குமார் மடிகேரி காவல் நிலையத்தில் செல்போனை கண்டுபிடித்து தர புகார்அளித்தார். இந்நிலையில், நவீன்குமாரின் மகள் ஹிருதிக்ஷா (12), குடகு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எனது அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவர் மிகவும் கஷ்டப்பட்டு என் அம்மாவுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தார். அந்த செல்போனில் எங்கள் குடும்ப புகைப்படங்கள், நான் சிறுவயதில் இருந்தபோது எடுத்த வீடியோக்கள், என் அம்மா பாடிய பாடல்களின் குரல் பதிவுகள்போன்ற விவரங்கள் இருக்கின்றன. இப்போது என் அம்மா இறந்துவிட்டதால் அவரை புகைப்படங்கள் வாயிலாக மட்டுமே பார்க்க முடியும்.
அந்த செல்போனை திருடியவர்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் யோசித்து கொடுத்து விடுங்கள் இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் அதனை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் உருக்கமாக கூறியிருந்தார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மடிகேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
newstm.in

