'கால் தான் இல்லை நம்பிக்கை நிறைய இருக்கு' பள்ளிக்கு 2 கி.மீ. குதித்தவாறே செல்லும் சிறுவன்..!!
'கால் தான் இல்லை நம்பிக்கை நிறைய இருக்கு' பள்ளிக்கு 2 கி.மீ. குதித்தவாறே செல்லும் சிறுவன்..!!

இன்றைய காலகட்டத்தில், ஆசிரியர்களை மதிக்காமல் ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்கள் மத்தியில், சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார் பர்வைஸ்.
காஷ்மீரின் ஹந்த்வாரா கிராமத்தில் வசித்து வரும் 14 வயது சிறுவன் பர்வைஸ், சிறுவயதில் தீ விபத்தில் சிக்கி தன்னுடைய ஒரு காலை இழந்துவிட்டார். செயற்கைக்கால் பொருத்தும் அளவுக்கு அவரது குடும்பத்தில் பொருளாதார வசதி இல்லை. இவர், நவ்காமில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு தினமும் ஒற்றைக்காலிலேயே நடந்து சென்று வருகிறார். படிப்பிலும் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள பர்வைசுக்கு அரசு சார்பில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. கிராமத்தில் உள்ள பாழடைந்த சாலையின் காரணமாக அதை அவரால் பயன்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், பர்வைஸ் ஒற்றைக் காலில் தினமும் 2 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட ஜெய்ப்பூர் ஃபூட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரேம் பண்டாரி, மாற்றுத் திறனாளி சிறுவன் பர்வைசுக்கு இலவசமாக செயற்கைக்கால் பொருத்த முன்வந்துள்ளார்.
தனது தொண்டு நிறுவனம், சர்வதேச அளவில் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும், பர்வைசின் வீடியோவை பார்த்ததும் அவரது குடும்பத்தினரை தான் தொடர்பு கொண்டதாகவும், அவருக்கு செயற்கைக்கால் பொருத்த நிச்சயம் உதவுவேன் என்றும் பிரேம் பண்டாரி தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுவன் பர்வைஸ் கூறும்போது, “ஒரு காலில் பேலன்ஸ் செய்து கொண்டே தினமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறேன். செயற்கை கால் கிடைத்தால் என்னால் நடக்க முடியும். என் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. தினமும் 2 கி.மீ. நடந்தே எனது பள்ளிக்குச் செல்கிறேன். எனது பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. நடக்கவே சிரமமாக உள்ளதால் பள்ளியை அடைந்தவுடன் எனக்கு வியர்க்கிறது.
இருப்பினும், எனக்கு வலிமை அளித்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். எனது சிகிச்சைக்காக எனது தந்தை தனது சொத்தை விற்க வேண்டியதாயிற்று. பள்ளிக்கு எனது பயணத்தை எளிதாக்கும் முறையான செயற்கை மூட்டு அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்து முறையை எனக்கு வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். பள்ளியை அடைந்த பிறகு நான் பிரார்த்தனை செய்கிறேன். எனக்கு கிரிக்கெட், வாலிபால் மற்றும் கபடி பிடிக்கும். எனது எதிர்காலத்தை வடிவமைக்க அரசு உதவும் என்று நம்புகிறேன். என் கனவுகளை அடைய எனக்குள் ஒரு நெருப்பு இருக்கிறது” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அவருடைய கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.
#WATCH| Specially-abled boy walks to school on one leg to pursue his dreams in J&K's Handwara. He has to cover a distance of 2km while balancing on a one leg
— ANI (@ANI) June 3, 2022
Roads are not good. If I get an artificial limb,I can walk. I have a dream to achieve something in my life, Parvaiz said pic.twitter.com/yan7KC0Yd3

