தேர்வறையில் இப்படித்தான் நடந்துக்கோணும்.. குரூப்-2 தேர்வர்களுக்கு வழிகாட்டல் வெளியீடு..!
தேர்வறையில் இப்படித்தான் நடந்துக்கோணும்.. குரூப்-2 தேர்வர்களுக்கு வழிகாட்டல் வெளியீடு..!

தமிழக அரசு துறைகளில் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ ஆகிய பதவிகளில் 5,529 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் வருகின்ற 21-ம் தேதி முதல் நிலை தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க, 11.78 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். விண்ணப்ப பரிசீலனை முடிந்து, விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளன.
ஹால் டிக்கெட்டில் தேர்வு மையங்களின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 4,012 மையங்களில் நடக்கிறது.
தேர்வறையில், தேர்வர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு வழிகாட்டல்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளதாவது; ‘ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். சுயவிருப்பத்தின்படி தேர்வு மையம் மாற்றப்படாது. தேர்வர்களுக்கான நிபந்தனைகளை சரியாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
தேர்வறையில், மற்ற தேர்வர்களிடம் கேட்டு விடை எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை பார்த்து விடைகளை காப்பி அடித்தல், மற்றவர்கள் எழுத விடைகளை காட்டுதல், 'பிட்' அடித்தல், அறை கண்காணிப்பாளர், ஊழியர்கள் உள்ளிட்டோரின் உதவியை பெற்று விடையை தேர்வு செய்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து வரக்கூடாது.
விடைத்தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல், தேர்வறைக்கு வெளியே எடுத்துச் செல்வதும், பார்கோடு பகுதியை கிழிப்பதும் முறைகேடு புகார்களாக கருதப்பட்டு, தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வறையில் அறை கண்காணிப்பாளர்களிடம் ஒழுக்கம் தவறி நடந்து கொள்ளக்கூடாது.
இதுபோன்று முறைகேடாக நடந்து கொள்வது, காப்பியடிப்பது போன்றவற்றில் ஈடுபடுவோர், மீண்டும் டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வை எழுத தடை விதிப்பதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

