தமிழகத்தில் இதுவே முதல்முறை.. புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி !!
தமிழகத்தில் இதுவே முதல்முறை.. புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி !!

தமிழகத்தில் முதல்முறையாக வனத்துறை சார்பில் புலிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் வனப்பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி உடலில் காயங்களுடன் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே ஆன அந்த புலிக்குட்டியின் உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி காயமடைந்திருந்தது. இதனையடுத்து தனி கூண்டில் வைத்து புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது ஓன்றரை வயதான அந்த புலி குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறது. அதன் உடல் எடையும் 118 கிலோவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்த புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்க கோவை மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்கமாக புலிக்குட்டிகள் தாயுடன் இருக்கும் பொழுது வேட்டையாட கற்றுக் கொள்ளும். ஆனால் இந்த புலிக்குட்டி எட்டு மாதமாக இருக்கும்போதே வனத்துறை பராமரிப்பற்கு வந்துவிட்டதால் இதற்கு வேட்டையாட தெரியாது. எனவே புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கும் விதமாக மானாம்பள்ளி அருகே உள்ள மந்திரிமடம் என்ற இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் 75 லட்ச ரூபாய் செலவில் கம்பி வேலி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூண்டில் வரும் 16ஆம் தேதி முதல் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது புலிக்குட்டி எளிதாக வேட்டையாடி பழகும் வகையில் முதலில் முயல், காட்டுப் பன்றி போன்றவை விடப்பட்டு வேட்டையாட பழக்கபடுத்தப்படும். முழு பயிற்சிக்கு பிறகு வேட்டையாடும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
newstm.in

