ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்! நாராயணசாமி பகீர் தகவல்!
ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்! நாராயணசாமி பகீர் தகவல்!

“காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ முன்னாள் இயக்குநர் உட்பட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட தகவல் நாட்டை உலுக்கியுள்ளது” என, புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது; “பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய விலை கொடுத்து, இஸ்ரேல் மென்பொருளை வாங்கி நமது நாட்டில் பலரின் மொபைல் போன் பேச்சை ஒட்டுக் கேட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ முன்னாள் இயக்குநர் உட்பட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட தகவல் நாட்டை உலுக்கியுள்ளது.
இப்பிரச்னை பாராளுமன்றத்திலும் வெடித்துள்ளது. நிலைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 6 நாட்கள் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் கவலை கொள்ளவில்லை. மத்திய அரசு மென்பொருளை பயன்படுத்தி பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளது. அதேபோல், புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு சம்பவத்தில் எனது செல்போன் ஒட்டுக்கேட்பே காரணம் என்று சந்தேகப்படுகிறேன். மொபைலில் பேசும்போது எனக்கு அது தெரிந்தது. வெளிப்படையான விசாரணை நடத்தினால் இதுகுறித்த உண்மைகள் வெளிவரும்.
புதுவையில் தற்போது குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த அரசு மக்களைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை” என அவர் கூறியுள்ளார்.

