பஞ்சாப்பை அடுத்து இந்த மாநிலம்.. மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்..!
பஞ்சாப்பை அடுத்து இந்த மாநிலம்.. மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்..!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தலைநகர் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பஞ்சாப்பில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம். குஜராத்திலும் கூட மக்கள் இதனை பெற முடியும். வருகிற ஞாயிற்றுக்கிழமை அடுத்த சந்திப்பின்போது இதற்கான தீர்வை நான் வழங்குவேன்” எனக் கூறியுள்ளார்.

பஞ்சாப்பில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இதனை தொடர்ந்து, பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, பதவியேற்றதும் கடந்த மார்ச் மாதத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டம் ஒன்றை பகவந்த் மான் அறிமுகப்படுத்தினார். ஆம் ஆத்மியின் தேர்தல் அறிவிப்பில் இந்த திட்டம் இடம் பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரச்சாரத்துக்கு வந்தபோது, “நாங்கள் ஆட்சி அமைத்தால் இலவச மின்சார விநியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும்” என தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.
இந்த சூழலில், அக்கட்சி ஆட்சியை பிடித்தது. அவர் அளித்த வாக்குறுதியின் படி, இலவச மின்சார விநியோக திட்டம் கடந்த 1-ம் தேதியில் இருந்து பஞ்சாப்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, குஜராத்தில் நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற ஆம் ஆத்மி முனைப்புடன் உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
அதன்படியே, பஞ்சாப்பின் மக்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் பெறுவது போன்று, குஜராத் மக்களுக்கும் கிடைப்பதற்கான தீர்வை வழங்குவேன் என கூறியுள்ளார்.

