இந்த முறையும் போச்சு.. தொடரும் ஆர்யன்கான் சிறைவாசம் !!
இந்த முறையும் போச்சு.. தொடரும் ஆர்யன்கான் சிறைவாசம் !!

மும்பையில் இருந்து கடந்த மாதம் 3ஆம் தேதி கோவாவுக்கு சென்ற கப்பலில் போதை விருந்து நடப்பதாக புகார் எழுந்தது. அந்த கப்பலில் பயணிகள் போல் சென்று நடுக்கடலில் வைத்து போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது, அந்த சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரிய வந்தது. நடுக்கடலில் நடந்த போதை விருந்தில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் பங்கேற்றது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்யன்கான் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 20 பேர் பிடிப்பட்டு உள்ளனர்.

ஆர்யன்கான் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே ஜாமீன்கோரி ஆரியன்கான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஆர்யன்கான் 2ஆவது முறையாக மனுதாக்கல் செய்திருந்தார். மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது தள்ளி வைக்கப்பட்டது. விசாரணையின்போது, என்.சி.பி. தரப்பில் ஆர்யன்கான் வழக்கமாக போதை பொருள் உட்கொள்பவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆர்யன்கான் தரப்பு வழக்கறிஞர், கைது செய்யும் போது ஆர்யன்கானிடம் இருந்து எந்தவித போதை பொருட்களும் கைப்பற்றியதற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணை 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் ஆர்யன்கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததுடன் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஜாமீன் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தை நாட ஆர்யன்கான் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
newstm.in

