தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை.. வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு !!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை.. வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு !!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்ய வேதாந்தா குழுமம் முடிவுசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு மே மாதம் 22ஆந் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு செய்துள்ளது. ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
தாமிர உருக்கு வளாகம், சல்பரிக் அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள 10 பிரிவுகளும் விற்பனைக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்பாக விற்பனைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு வேதாந்தா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
newstm.in

