‘ஸ்விகி’ ஊழியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவலர் கைது !!
‘ஸ்விகி’ ஊழியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவலர் கைது !!

கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். ஸ்விகி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தனியார் பள்ளி வாகனம் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
அதனைக் கண்ட மோகனசுந்தரம் அந்த வாகனத்தை விரட்டிச் சென்றபோது போக்குவரத்து காவலர் தன்னை தாக்கியதாகவும் அதற்கு ஒரு நீதி வேண்டும் எனவும் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை தான் வழிமறித்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.

'அதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம், நீ யார்?' எனவும், மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என்றும் கேட்டு, அந்த பள்ளி வாகன ஓட்டுனரை அனுப்பி வைத்துவிட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து அனுப்பியதாக தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருந்த அந்தப் பெண் இது குறித்து கேட்டபோது போக்குவரத்து காவலர் அந்தப் பெண்ணையும் செல்லுமாறு கூறி அனுப்பி விட்டதாக தெரிவித்தார்.
தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டிக் கேட்பதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாயமற்ற செயல் என அவர் புகார் தெரிவித்தார். இதனையடுத்து போக்குவரத்து காவல் அதிகாரி உணவு டெலிவரி ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர் சதீஷை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடம் மாற்றி உத்தரவிட்டார்.
விசாரணையின் இறுதியில் காவலர் சதீஷ் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மோகனசுந்தரம் பீளமேடு போலீவில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவர் சதீஷ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ள போலீஸார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்துள்ளதுடன், காவலர் சதீஷை பணியிடை நீக்கம் செய்தும் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
newstm.im

