விவிஐபி நபா்களுக்காக 15- 20 நிமிடங்கள் மட்டுமே போக்குவரத்து கட்டுப்பாடு.. குடியரசுத் தலைவர் !!
விவிஐபி நபா்களுக்காக 15- 20 நிமிடங்கள் மட்டுமே போக்குவரத்து கட்டுப்பாடு.. குடியரசுத் தலைவர் !!

விவிஐபி நபா்களுக்காகப் பொது மக்களின் போக்குவரத்துக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் வலியுறுத்தியுள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், லக்னௌவில் உள்ள சைனிக் பள்ளியின் வைரவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது, சைனிக் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாநில முன்னாள் முதல்வா் சம்பூா்ணானந்தின் 20 அடி உயர சிலையை அவா் திறந்து வைத்தாா்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்கள் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தால் மட்டுமே நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும். நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட சைனிக் பள்ளி இதுதான். பெண்களுக்கு முதன் முதலில் பயிற்சி அளித்த சைனிக் பள்ளியும் இதுவே. அப்பெண்கள் அனைவரும் நடப்பாண்டு நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி தோ்வில் பங்கேற்கவுள்ளனா். மகளிா் மேம்பாட்டில் ராணுவக் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தப் பள்ளியில் பயின்றவரான கேப்டன் மனோஜ் குமாா் பாண்டே, காா்கில் போரில் பங்கேற்று வீரமரணமடைந்தாா். அவரது தியாகத்துக்கு நாடே கடன்பட்டுள்ளது. மேஜா் தியான் சந்த், மில்கா சிங், நீரஜ் சோப்ரா எனப் பல விளையாட்டு வீரா்களை ராணுவம் வழங்கியுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், விவிஐபி நபா்களின் பயணத்தை எளிமைப்படுத்தும்போது வழக்கமான போக்குவரத்துக்குக் குறைந்தபட்ச இடையூறு மட்டுமே ஏற்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறான சமயங்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
அதே வேளையில், அவசர சிகிச்சை ஊா்தி உள்ளிட்ட வாகனங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. போக்குவரத்தைத் தடுக்கும்போது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றாா்.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் கடந்த ஜூனில் குடியரசுத் தலைவா் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வந்தனா மிஸ்ரா என்ற பெண் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டி அவர் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
newstm.in

