சோகம்.. மரக்கிளையை ஒடித்த பெண் யானை மின்சாரம் தாக்கி பலி..!
சோகம்.. மரக்கிளையை ஒடித்த பெண் யானை மின்சாரம் தாக்கி பலி..!

கூடலூர் அருகே, இரைக்காக மரக்கிளையை ஒடித்த பெண் யானை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பகுதியில் வுட் பிரயர் எனும் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த தேயிலை தோட்டத்தில் 5 காட்டு யானைகள் வழக்கமாக சுற்றி வருகின்றன.
இந்த தேயிலை தோட்டத்தில் உள்ள கோவில் ஒன்றின் வழியாக குடியிருப்புகளுக்கு மின்கம்பி செல்கிறது. இன்று அதிகாலை கோவில் பகுதிக்கு வந்த காட்டு யானை கூட்டம் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளது.
அப்போது, கோவில் முன்புள்ள அரச மரத்தில் உள்ள இலைகளை உடைத்துத் தின்ன பெண் யானை ஒன்று முற்பட்டுள்ளது. இதன்போது, கிளையை ஒட்டி சென்ற மின்கம்பியில் சிக்கி பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
காலை 7 மணி அளவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் யானை இறந்தது கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், யானை விபத்துக்குள்ளாகி இருந்த மின் கம்பி செல்லும் பாதையை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

