விழுப்புரம் அருகே சோகம்.! பேரப்பிள்ளைகள்.. பாட்டி என அடுத்தடுத்து குட்டையில் மூழ்கி 4 பேர் பலி..!!
விழுப்புரம் அருகே சோகம்.! பேரப்பிள்ளைகள்.. பாட்டி என அடுத்தடுத்து குட்டையில் மூழ்கி 4 பேர் பலி..!!

திண்டிவனம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள்கள் வினோதினி (13), ஷாலினி (10), மகன் கிருஷ்ணன் (8). இவர்கள் மூவரும் திண்டிவனம் பிளோமினாள் பள்ளியில் முறையே 7, 5, 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் மூவரும் நேற்று முன்தினம் மரக்காணம் அருகே உள்ள பெருமுக்கல் கிராமத்தில் உள்ள தனது பாட்டி புஷ்பா (60) வீட்டிற்கு வந்தனர். இவர் தனது மகள் வழிப் பேரக் குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்குச் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு 4 பேரும் வாயில் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சற்று முன்னால் சென்று குளித்த சிறுவன் கிருஷ்ணன் நீரில் மூழ்கினார். கிருஷ்ணனைத் தேடி குட்டையின் நடு பகுதிக்குச் சென்ற போது வினோதினியும், ஷாலினியும் மூழ்கினர். செய்வதறியாமல் திகைத்த பாட்டி புஷ்பா கூச்சலிட்டபடி பதற்றத்தில் குட்டையின் நடு பகுதிக்கு சென்றபோது அவரும் மூழ்கினார்.
புஷ்பாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, குட்டையின் கரையில் உடைகள் மட்டும் இருந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

