சோகம்.. பஸ்சில் இருந்து குதித்த பிளஸ் 2 மாணவி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!
சோகம்.. பஸ்சில் இருந்து குதித்த பிளஸ் 2 மாணவி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சினிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் நவ்யா ஸ்ரீ (17). இவர், கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி நவ்யா ஸ்ரீ வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் அரசு பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பஸ் சினிகிரிப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், மாணவி பஸ்சில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருடைய கை மற்றும் கால்கள் மீது பஸ்சின் சக்கரம் ஏறியது. படுகாயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி நவ்யா ஸ்ரீ சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பஸ் வழக்கம்போல நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என மாணவியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

