தேர்தலுக்காக 7 பேர் விடுதலையை கையில் எடுக்கும் மோடி!!
தேர்தலுக்காக 7 பேர் விடுதலையை கையில் எடுக்கும் மோடி!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இந்த விவகாரத்தை கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரமதர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் இது குறித்து அவர்தான் முடிவு செய்வார் என்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எழுவரை விடுதலை செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதனிடையே, மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலாளர் நசீன் கான் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9 -ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் மூலம் முடிவை அறிவிப்பார் என்றும், தமிழகம் வரும் பிரதமர் மோடி இதனை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும், அமைப்புகளையும் பாஜக - அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் நிலை உருவாகும். திமுக தனித்துவிடப்படும் என கூறப்படுகிறது.

