ஜனநாயகத்துக்கு சோதனை காலம்; சொல்கிறார் திருச்சி சிவா..!
ஜனநாயகத்துக்கு சோதனை காலம்; சொல்கிறார் திருச்சி சிவா..!

டில்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேரில் சந்திக்க திட்டமிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் இன்று (6ம் தேதி) விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட திமுக, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார்.
இதையடுத்து திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும்போதும், அதனை நிலைக்குழுவுக்கு அனுப்புவதில்லை, விவாதிப்பதில்லை, இந்தியா கண்டிராத மோசமான நிலைமை இது.
இத்தனை நாட்களாக 3 பிரச்னைகளைத்தான் விவாதிக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். வேளாண் சட்டங்கள், பெகாசஸ், விலைவாசி உயர்வு ஆகியன. மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை. நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. இது, ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சோதனைக் காலம்” எனத் தெரிவித்தார்.