லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!
லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (36). இவர் வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் லாரியில் டிரைவராக வேலை பாா்த்தது வந்தார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், லாரியில் வெளிமாநிலத்திற்கு சென்றிருந்த கருப்பசாமி 3 மாதங்களுக்கு பின்னர் கடந்த 7-ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார்.
அன்று இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது, கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரது செல்போனுக்கு ஒரு நம்பரில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் கனகலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கருப்பசாமி அடிக்கடி குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்து வந்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கடம்பூர் மகளிர் காவல் நிலையம் வரை சென்றது.
அப்போது, கனகலட்சுமியின் உறவினரான சோழபுரத்தை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் என்பவர் கனகலட்சுமிக்கு ஆதரவாக உதவி செய்தார். பின்னர் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். நாளடைவில், அவர்கள் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
ரவிச்சந்திரனிடம் போனில் பேசி வருவதை தெரிந்து கொண்ட கருப்பசாமி, கனகலெட்சுமியை கண்டித்தது மட்டுமின்றி, அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி வீட்டிற்கு வந்த கருப்பசாமி வீட்டின் வெளியே தூங்கும் தகவலை ரவிச்சந்திரனுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார் கனகலட்சுமி.
இதையடுத்து பேரூரணிக்கு வந்த ரவிச்சந்திரன், வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமியின் கழுத்தை அறுத்தும், நெஞ்சில் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமியையும் கைது செய்தனர்.

