மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை...இருவர் கைது, ஒருவர் தலைமறைவு!!
மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை...இருவர் கைது, ஒருவர் தலைமறைவு!!

கந்துவட்டி கொடுமையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக தொடங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார் மனுக்கள், 89 எஃப்ஐஆர், 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடனாக கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியதில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால் இருவர் ஆபரேஷன் கந்துவட்டி திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. கூலி தொழிலாளி செய்து வந்த சுந்தரமூர்த்தி, அதே கிராமத்தில் வசித்து வந்த கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக 35 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளர்.
இந்த நிலையில் கடன் கொடுத்த மூவரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடம் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுந்தரமூர்த்தியின் மனைவி கமலி திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கந்துவட்டி சட்டத்தின் கீழ் கணபதி, கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான விக்னேஷை தேடி வருகின்றனர்.

