உஷார்! வாட்ஸ் அப் மூலம் உங்கள் பணம் திருடப்படலாம்!
உஷார்! வாட்ஸ் அப் மூலம் உங்கள் பணம் திருடப்படலாம்!

உலக அளவில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. கோடிக்கணக்கானவர்கள் தினம் தினம் தகவல் பரிமாற்றத்திற்காக இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் வாட்ஸ் அப் மோசடி சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இதில் அனுப்பப்படும் போலி செய்திகள் மூலம், மோசடி செய்பவர்கள் பயனர்களை சிக்க வைத்து அவர்களின் தகவல்களை சேகரித்து அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழிமுறைகளை கையாளுகின்றனர்.
உதாரணத்திற்கு, சமீபத்தில் வாட்ஸ் அப்களில் வலம் வந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, , காலணிகள் தயாரிக்கும் நிறுவனமான அடிடாஸ் இலவச காலணிகளை வழங்குவதாக வெளியிடப்பட்ட செய்தி. இந்த செய்தியுடன் ஒரு இணைப்பு செய்தியும் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டு இணைப்பைக் கிளிக் செய்தவுடன் மூன்றாம் தரப்பு பக்கம் திறக்கப்படும். மகளிர் தினத்தை முன்னிட்டு, அடிடாஸ் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு காலணிகளைக் கொடுக்கிறது என்று அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மிக உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே URLல் எழுதப்பட்ட அடிடாஸின் எழுத்துப்பிழை தவறாக இருப்பதை கண்டறிய முடியும் . ஆனாள் பெண்கள் தினத்தை முன்னிட்டு அடிடாஸ் எந்த இலவச சலுகையும் அறிவிக்கவில்லை என்பதே உண்மை. சலுகைகள் இருந்தாலும், எந்த நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தான் அதை வெளியிடும் என்பதை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சலுகையின் செய்தியைப் பெற்றால், அதை உடனடியாக டெலிட் செய்துவிட வேண்டும். இல்லையெனில் லிங்கை கிளிக் செய்தால், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு விடும் அபாயம் நேரலாம். இதுபோன்ற செய்திகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.