“திமுகவினர் மிரட்டலை நிறுத்தினால் தடுப்பூசி கிடைக்கும்..!” - எல்.முருகன்
“திமுகவினர் மிரட்டலை நிறுத்தினால் தடுப்பூசி கிடைக்கும்..!” - எல்.முருகன்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வடபழனி முருகன் கோயிலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு தடுப்பூசிகள் வாங்கப்பட்டது..? மாவட்டங்களுக்கு எவ்வளவு பிரித்து கொடுக்கப்பட்டது..? இதுவரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்..? எவ்வளவு வீணடிக்கப்பட்டுள்ளது..? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இந்த மாதம் மட்டும் தமிழகத்திற்கு 42 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 1.28 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களில் திமுகவினர், அதிகாரிகளை மிரட்டி டோக்கன்களை பறிப்பதை நிறுத்தினாலே தடுப்பூசி முறையாக கிடைக்கும். தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை.
தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும் என்று திமுக கூறியிருந்தது. அதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு இதுவரை எடுக்கவில்லை. சொல்லப்போனால், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
அதேபோல், மாதம்தோறும் தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்கள். அதுபற்றிய அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார்களோ, அதை முதலில் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு முதலில் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்கட்டும்” என்று கூறினார்.

