வடபழனி முருகன் கோவிலில் பிரசாத கடைக்கு சீல்!!
வடபழனி முருகன் கோவிலில் பிரசாத கடைக்கு சீல்!!

வடபழனி முருகன் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக ஸ்ரீனிவாசன் என்பவர் பிரசாதங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். கோவிலுக்குள் இருக்கும் ஒரே பிரசாத கடை என்பதால் பக்தர்கள் ஸ்ரீனிவாசனின் கடையில்தான் பிரசாதம் வாங்கிச் செல்வர்.
இந்நிலையில் இவரது கடையில் தரமற்ற பொருட்களை பிரசாதமாக வழங்கி வருவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உணவு பாதுகாப்புத் துறைக்கு வந்தன. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இவரது கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது பல ஆண்டுகளாக உரிமை இல்லாமல் ஸ்ரீனிவாசன் கோவிலுக்குள் பிரசாத கடை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக கடை நடத்துவதற்கான லைசென்ஸ் மற்றும் தரமான பொருட்கள் விநியோகம் செய்யாததற்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீனிவாசனுக்கு அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் மீண்டும் தரமற்ற பிரசாதங்களை ஸ்ரீனிவாசன் விநியோகித்து வருவதாக புகார் வந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் ஸ்ரீனிவாசன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரமற்ற லட்டு, அதிரசம், தட்டு வடை, முறுக்கு, பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை வழங்கி வந்தது தெரியவந்தது. மேலும், வடபழனி சாஸ்திரி நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு வடபழனி முருகன் கோவிலின் போலியான பெயரில், பிரசாதங்களை தயார் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான லட்டு, பஞ்சாமிர்தம், அதிரசம், தட்டு வடை, முறுக்கு போன்ற கோவில் பிரசாதங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் சீனிவாசனின் பிரசாத கடை மற்றும் பிரசாதங்கள் தயாரிக்கும் இடம் ஆகியவற்றிற்கு சீல் வைத்தனர்.
பல ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் எப்படி கோவில் வளாகத்தில் ஸ்ரீனிவாசன் பிரசாத கடை நடத்தி வந்தார் என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

