சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மரணம் !
சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மரணம் !

பிரபல சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சார்ந்தவர் மாதையன் ( 75 ). கர்நாடகா மற்றும் தமிழக போலீசாருக்கு பெருந்தொல்லையாக இருந்த பிரபல சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மூத்த சகோதரரான மாதையன், கடந்த 1987 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்தியமங்கலம் கொலை வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

மாதையன் இருதய நோய் , சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மாதையன் அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். சிகிச்சை முடிந்து மீணதும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுவார்.
அதேபோல் அவருக்கு அவ்வப் போது சிறை அதிகாரிகள் பரோல் வழங்கியும் வந்தனர். கடந்த மாதம் பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது . இதையடுத்து அவர் சேலம் அரசு மருத் துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக மாதையனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மாதையன் உயிரிழந்தார்.
newstm.in

