வேலூர் ‘வைரல்’ சாலை இரவோடு இரவாக அகற்றம்!!
வேலூர் ‘வைரல்’ சாலை இரவோடு இரவாக அகற்றம்!!

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் தெருவில் நள்ளிரவில் போடப்பட்ட சிமெண்ட் சாலை வேலூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காளிகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்த சிவா என்பவர் இருசக்கர வாகனத்தை இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றார்.
காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. அதோடு சேர்ந்து தெருவோரம் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.

அவர் வாகனத்தை எடுக்க முயற்சித்த போது எடுக்க முடியவில்லை. சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக சாலை போட்டனர்.
அப்போது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டனர். இதுகுறித்த செய்தி வெளியானதை அடுத்து இரவில் போடப்பட்ட சாலையானது அடுத்த நாள் இரவிலேயே முழுவதுமாக பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்ட பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் உறங்கி எழுந்தவுடன் ஒவ்வொரு அதிர்ச்சியும் தங்களுக்கு காத்துக் கொண்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
newstm.in

