முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் துணிகர கொள்ளை.. ஆவணங்களை கைப்பற்ற முயற்சியா?
முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் துணிகர கொள்ளை.. ஆவணங்களை கைப்பற்ற முயற்சியா?

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் தனபால். தற்போது, அவிநாசி எம்.எல்.ஏ. ஆன தனபால், திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு அதற்கு மறுநாள், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சேலம் சென்றுவிட்டார். இதனால் திருப்பூர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், திட்டம்போட்டு சதி திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். அதாவது, நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கதவு தாழ்ப்பாளை உடைத்து மர்மகும்பல் வீட்டில் புகுந்துள்ளது.

அங்கு ஒரு அறையில் சாவியுடன் பீரோ இருந்தது அக்கும்பலுக்கு வேலை எளிதானது. அதன்படி பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு வெள்ளி குத்துவிளக்குகள் உட்பட பொருட்களை திருடியுள்ளனர். அதோடுமட்டுமல்லாமல், அருகில் உள்ள மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்க கதவை அக்கும்பல் உடைத்துள்ளது. சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். இதையடுத்து, திருடர்கள் தப்பிவிட்டனர்.

இது குறித்து தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் விசாரித்தனர். போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர், ஆயுதங்களுடன் அப்பகுதியில் சென்றது தெரியவந்தது. அவர்கள் யார் என கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இதனிடையே, தனபால் வீட்டில் வேறு ஏதேனும் ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் திருடர்கள் வந்தனரா? இதில் அரசியல் காரணங்கள் உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் கூறுகின்றனர்.
newstm.in

