அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை கொட்டும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை கொட்டும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. எனினும் தென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வெயிலே பெரியளவுக்கு தெரியாத நிலையில் உள்ளனர்.

அதாவது, தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 13 ஆம் தேதி (புதன்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுவே நாளை மறுநாள் (14 ஆம்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
newstm.in

