நேதாஜி ராணுவ படையில் இணைந்து போரிட்ட வீராங்கனை மறைவு !!
நேதாஜி ராணுவ படையில் இணைந்து போரிட்ட வீராங்கனை மறைவு !!

இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அப்போது அஞ்சலைக்கு 21 வயது. இரண்டாம் உலகப் போரின் போது, மலேசியாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவினர். அப்போது, இந்தியப் பெண்கள் ராணுவ உடையுடன் கம்பீரமாக இருப்பதை பார்த்த அஞ்சலைக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை வந்தது.
இதனால், துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு, துப்பாக்கி உள்பட பல்வேறு வகையான ஆயுதங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் அவர் மலேசியாவில் உள்ள தனது சொந்த ஊரில் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிததுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 'இந்திய தேசிய இராணுவத்தில்' (INA) ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102 வயது) நேற்று முன்தினம் மலேசியாவின் செந்துல் நகரில் காலமானார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் பிறக்காவிட்டாலும், வாழாவிட்டாலும் 21 வயதே ஆன நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் சேர்ந்து கடும் நெருக்கடி மிகுந்த சூழல்களில் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் அஞ்சலை பொன்னுசாமி அம்மாள். இந்தியா, மலேசியா இரு நாடுகளும் முறையே 1947 மற்றும் 1957 ஆண்டுகளில் விடுதலை பெற்றதைக் கண்டு மகிழ்ந்து நிறைவாழ்வு வாழ்ந்து அவர் விடைபெற்றிருக்கிறார்.
வீரம், மனவுறுதி, துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண்குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய அஞ்சலை பொன்னுசாமி அம்மாளின் தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும், என்று கூறியுள்ளார்.
newstm.in

