விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் !
விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் !

சர்ச்சைக்குரிய மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். எனினும் அறிவிப்பு மட்டும் போதாது நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அதுவரை போராட்டம் நடத்துவோம் எனவும் விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

அதன்படி கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், மசோதாவை ரத்து செய்வதற்கு பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேறியது.
தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட, அவர் நேற்று அதற்கு அதற்கு ஒப்புதல் அளித்தார். இதனால், மூன்று புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்ட நிலையை அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அதிகாரப்பூர்வமாக தங்கள் போராட்டத்தை கைவிட்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

