இலங்கை வன்முறை.. ஆளுங்கட்சி எம்.பி. அடித்துக்கொலை.. மேயர் வீட்டுக்கு தீ வைப்பு !!
இலங்கை வன்முறை.. ஆளுங்கட்சி எம்.பி. அடித்துக்கொலை.. மேயர் வீட்டுக்கு தீ வைப்பு !!

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் இந்த நிலைக்கும், மக்கள் படும் அவதிக்கும் பிரதமர் மற்றும் அதிபர் தான் காரணம் என்பதால் பதவிவிலக வேண்டும் என போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் நடந்து வரும் போராட்டத்துக்கு பணிந்து பதவி விலகினார். பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபரும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் பிரதமர் மகிந்த இல்லத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது மகிந்தவின் ஆதரவாளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கலவரம் பரவி வரும் அதே வேலையில் காலேமுகத்திடலில் ராஜபக்சே பதவி விலகலை வரவேற்று கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இருப்பினும் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்ட இலங்கை ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரலாவை பொதுமக்கள் அடித்தே கொன்றதாகவும், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்புவில் ராஜபக்சே ஆதரவாளர்களை ஏற்றிவந்த பேருந்து மீது ஜேசிபி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள் பயணித்த கார், பேருந்தை போராட்டக்காரர்கள் ஏரியில் தூக்கி வீசினர். இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.
newstm.in

