படுதோல்விக்கு பின் தனுஷிடம் இருந்து பாடம் கற்ற விஷால்..!
படுதோல்விக்கு பின் தனுஷிடம் இருந்து பாடம் கற்ற விஷால்..!

தொடர்ந்து தன்னுடைய படங்கள் தோல்வி அடைந்து வருவதால் மன வருத்தத்தில் இருக்கும் நடிகர் விஷால், இளையவரானாலும் பரவாயில்லை, வெற்றிநடை போடுவதற்கு நடிகர் தனுஷ் வழியை பின்பற்ற முடிவு செய்துள்ளராம்.
அதிரடி படங்களுக்கு ஏற்ற உடல்வாகும், காதல் காட்சிகளுக்கு ஏற்ற குறும்பு முகமும் கொண்டவராக இருந்தவர் விஷால். ஆனால் இதெல்லாம் பழைய கதை. கயவர்கள் பிடியில் இருக்கும் தமிழ் சினிமாவை மீட்கப்போகிறேன் என்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அது பல்வேறு வகையில் பலனளித்தாலும் கூட, விஷாலுக்கு சறுக்கலாக தான் அமைந்தது. விஷாலை நம்பியிருந்தவர்களுக்கு அது ஆதாயமானது. ஆனால் விஷாலுக்கு அது பெரும் துயராக மாறியது. சினிமா சமூகத்தை நோக்கி நடைபோட்டவருக்கு, தன்னுடைய சினிமா பாதையை கவனிக்க முடியாமல் போனது.
இதன் விளைவு தொடர் தோல்விகள். இரும்புத்திரை, துப்பறிவாளன் என அவ்வப்போது சில படங்கள் ஹிட்டடித்தாலும் , விஷாலுக்கு தோல்வி ரெக்கார்ட் உச்சத்தில் உள்ளது. அதனால் இந்த ஹிட் படங்களின் வசூல் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. போதாதகுறைக்கு மிஷ்கினுடன் தகராறு வேறு. ஒரேநாளில் சினிமாவில் சம்பாதித்த நற்பெயரை அனைத்தையும் இழந்துவிட்டார்.

இந்நிலையில் சக்ரா படத்தை பெரிதும் நம்பியிருந்தார் விஷால். தமிழ் சினிமா எதிர்பார்க்கும் மொத்த மசாலா சமாச்சாரங்களும் கலக்கான நியூ ஜென் அம்சத்துடன் சக்ரா படம் உருவாகி இருந்தது. ஆனால் ஏனோ ரசிகர்களை அந்த படம் கவரவில்லை. விளைவு, விஷாலின் தொடரும் தோல்வி படங்கள் என்கிற லிஸ்டில் சக்ராவும் இணைந்தது.
ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் படம் வெளியான இரண்டாவது நாளே படக்குழு சக்ஸஸ் பார்டி கொண்டாடியது. ”வழக்கம் போல இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்கிற ரீதியில் கோலிவுட் இந்த நிகழ்வை கடந்து சென்றது. ஆனால் சினிமாவில் தன்னுடைய நிலையை விஷால் நன்கு உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது.இந்த நிலை தொடர்ந்தால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தன்னை கைவிட்டு விடுவார்கள் என்பது அவருடைய அச்சமாக உள்ளது. இதனால் சொந்தமாக படம் தயாரிப்பதை கொஞ்சம் நிறுத்திவைத்துவிட்டு, வெளி சினிமா கம்பெனிகளுக்கு படம் பண்ணும் முடிவை விஷால் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சில காலம் முன்பு நடிகர் தனுஷுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர், வெளி கம்பனிகளுக்கு பணியாற்றினார். முடிவு நல்லதாகவே அமைந்தது. தற்போது இந்த ஃபார்மூலாவை பின்பற்ற நடிகர் விஷால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் வீட்டில் விஷாலுக்கு பெண் பார்க்கும் படலமும் தீவிரமடைந்துள்ளது.

