தொண்டர்களே... விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன்... சசிகலா கடிதம்
தொண்டர்களே... விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன்... சசிகலா கடிதம்

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலிலிருந்து விலகியிருக்கப்போவதாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா.
சசிகலாவின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பல மாதங்களாக அமைதி காத்துவந்த சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆடியோ அரசியலை மேற்கொண்டு வந்தார். மாவட்டங்கள் தோறும் உள்ள தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா குறிப்பிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்த்தெடுக்கபட்ட ஒரு இயக்கம் ஆகும், ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம் பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்
என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது, வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.