மே 31 வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம்... ஆர்.கே.செல்வமணி உருக்கத்துடன் அறிவிப்பு !!
மே 31 வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம்... ஆர்.கே.செல்வமணி உருக்கத்துடன் அறிவிப்பு !!

மே 31ஆம் தேதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்ஸி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா 2ஆம் அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனினும் சிலர் ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றியதால் இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் செயல்படும் எனவும், தேநீர் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்ஸி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி படப்பிடிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். அப்போது, சென்ற வாரம் முதல்வரை சந்தித்தோம். சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனோ நிவாரண நிதியுதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.

சினிமா தொழிலாளர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. எனவே படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
newstm.in

