என்ன கொடுமை இது! தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள் !
என்ன கொடுமை இது! தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பின்னர் அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை அடுத்து தலிபான்கள் அசுர வேகத்தில் நகர் பகுதிக்குள் புகுந்தனர். அரசு படைகளை விரட்டிய அவர்கள் கடைசியாக காபூலை கைப்பற்றியதும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 வரை கொடுங்கோன்மை ஆட்சி நடத்தியதால் தலிபான்கள் பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்தனர். குறிப்பாக பெண்கள் உரிமை தாலிபான் ஆட்சியில் நசுக்கப்பட்டிருக்கிறது. பெண்களை குறிவைத்து தற்போது தாக்குதல்களும், கொலைகளும் ஆப்கனில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காபுலை கைப்பற்றிய பின்னர் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த அல்கொய்தா பயங்கரவாதிகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றவாளிகளை தலிபான்கள் விடுவித்தனர். அவர்கள் தற்போது நகர் பகுதியில் உலா வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் கெடுபிடி காட்டும் தலிபான்களாலும், முன்னதாக இதே கைதிகளுக்கு தண்டனை விதித்த பெண் நீதிபதிகள் சுமார் 200 பேர் உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி இண்டிபெண்டண்ட்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

38 வயது பெண் நீதிபதி ஒருவர் கூறுகையில், நாங்கர்கர் மாகாணத்தில் நான் வசித்து வந்த பகுதியில் இருந்து நான் வேறு இடத்தில் தலைமறைவாக இருக்கிறேன். எனது பகுதிக்கு சென்ற தாலிபான்கள் இங்கே பெண் நீதிபதிகள் யாரேனும் வசிக்கிறார்களா என விசாரித்துள்ளனர்.
தலிபான்கள் என்னை கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் என்னை கொலை செய்துவிடுவார்கள். நான் உண்மையில் அச்சத்தின் பிடியில் இருக்கிறேன். தலிபான்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். 8 மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை வன்கொடுமை செய்ததற்காக என்னால் தண்டனை பெற்ற இளம் தலிபான் போராளி ஒருவன் என்னை கொடுமைப்படுத்துவதற்காக தேடி வருவதாக கேள்விப்பட்டேன்.

நான் அவனுக்கு தண்டனை கொடுக்கும்போதே, நான் வெளியே வரும் போது உன்னை என்ன செய்கிறேன் பார் என கூறினார். அப்போது இதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது வெளியே வந்த பின் என்னை தொடர்பு கொண்டு மிரட்டினான் என கூறியுள்ளார்.
முன்னாள் நீதிபதிகளுக்கே இந்த நிலையா என சர்வதேச சமூகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
.
newstm.in

