Theme Check

யாருக்கு எங்கு பணி என உத்தரவிட முடியாது - ஐகோர்ட்..!

யாருக்கு எங்கு பணி என உத்தரவிட முடியாது - ஐகோர்ட்..!

யாருக்கு எங்கு பணி என உத்தரவிட முடியாது - ஐகோர்ட்..!
X

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின் போது குழறுபடிகள் நடைபெறுவதால், தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளை தவிர்த்து ஏற்கனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் முடிந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தலை நியாயமாக நடத்துவதற்காக ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களையே தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. இதுபோன்று தொடரப்பட்ட வழக்குகள் கண்டிக்கத்தக்கது. தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story
Share it