சாம்பியன் கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு !! மல்லுகட்ட தயாராகும் ஆஸி. - நியூசி. !!
சாம்பியன் கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு !! மல்லுகட்ட தயாராகும் ஆஸி. - நியூசி. !!

கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டமான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
இதன் இறுதிப்போட்டி துபாயில் நாளை (நவ.14) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான்களாக திகழும் இந்த இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஆஸ்திரேலிய அணி 2ஆவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன்பு 2010ஆம் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது ஆஸ்திரேலியா. 5 முறை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற அந்த அணி தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவரில் சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 அரை சதத்துடன் 236 ரன் எடுத்துள்ளார். மேத்யூ வாடே, ஸ்டோனிஸ் போன்ற அதிரடி வீரர்களும் இருக்கிறார்கள். மிச்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி வருகிறார். பந்துவீச்சில் ஆடம் சம்பா (12 விக்கெட்), ஸ்டார்க் (9), ஹாசல்வுட் (8) தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
நியூசிலாந்து அணி முதல்முறையாக 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 2015ஆம் ஒருநாள் போட்டி உலககோப்பை இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. இதற்கு நாளை இறுதிப்போட்டியில் பதிலடி கொடுத்து முதல்முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது. ஆஸ்திரேலியாவை போலவே நியூசிலாந்தும் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று உள்ளது.

நியூசிலாந்து அணியில் மிச்சேல் (197 ரன்), கப்தில் (180 ரன்), கேப்டன் வில்லியம்சன், ஜிம்மி நீசம் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். போல்ட் (11 விக்கெட்), சோதி (9) சவுத்தி (8) ஆகியோர் பந்து வீச்சில் கலக்கி வருவதால் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சவாலாக நியூசிலாந்து அணி உள்ளது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

